தாய்-1

 தாயின் இறுதிக் கடன்

------------------------------------------

நடந்து போக நான் பிடிக்க நீட்டியவிரல்

பசியாற பால் கொடுத்த தேகம்

புசித்திட புகட்டிய பாகம்

காலைக் கடனில் ஒன்றைக் 

கழித்த குத்துக் கால்களும்

இவன் அக்கம்பக்கம் 

அலைந்திட வேண்டி

குந்தியிருந்த கக்கமும்-நான்

காயப்பட்டபோது கலங்கிய கண்களும்

என்னைக்  கைக்குழந்தையாய் ஏந்தி 

என் கன்னம் சாய்த்த கன்னங்களும்

மகனை வாழ்த்திய வதனமும்

துயில்மடிந்த மடியும்-இவை

மொத்தமாய் மடிந்து மல்லாந்திருந்தாள்

தீயின் பசிக்கு தாயைத் தந்தேன்

திரும்பாதே என்ற தகவலுக்கு 

தலைவணங்கி-நான்

விரும்பிய வாழ்க்கையை 

வழங்கியவளை விட்டுவிட்டு 

வருந்திய படியே  

வெறும் கையோடு 

வீடு திரும்பினேன்.....

சந்ததி காண

சாம்பலைத் தின்றவள்-ஆண்டவன்

சந்நிதி காண 

சாம்பலாகிப் போனாள்.

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு