உணவு

 உணவு

----------------

அக்கறையில் அடுக்களையில்

ஆக்குவதில் அவசரத்தில் 

உப்பில்லாத உணவுக்காக

கொப்பளிக்கும் கோபம்-கரம்

கூப்பி அழைத்த சாபம்

பரிமாறிய தட்டை பறக்கவிட்ட

பரிதாபப் பிறவியே

உணவுக்காக உணவகம் போவோரே-நான்

உரைப்பதை ஒரு கணம் கேளுங்கள்

எச்சில் ஊறிய வகைகளில்

எச்சரிக்கை தேவை

வாய்க்கு ருசியாக விரும்புவதெல்லாம்

வாய்க்கரிசியாக விழுவதுதான்

நஞ்சு கலந்ததை

நாவிற்கினிய நளபாகம் என்பார்

சுடு சோறிலே

சுண்ணாம்பு கலப்பார்

சுவையான சாம்பாரிலே

சூனியம் வைப்பார்

கெட்டு அழுகிய காய்கறியை

கேட்டு வாங்கி கூட்டு வகை

முதலாளி தொழிலாளி முரணாலே

கழுவாத பாத்திரத்தில்

கொட்டி வைப்பார் ஆத்திரத்தில்

இலையில் இடுவார் இவைகளை

விலை கொடுத்து வாங்கியதால் வளைத்துக் கட்டி வயிறு கெட்டு

அலைக்கழித்தால் ஆயுள் மட்டு 

-ஆனால்

உடையவள் உலையிலிடுவது

உணவு அல்ல உணர்வு-உன்னை

உயர்வாகக் கருதும் உறவு

உனது ஆரோக்கியம் அவள் வைராக்கியம்.


        கவிஞர்

 செ.காமாட்சி சுந்தரம்

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு